×

₹2.50 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்: எம்பி, எம்எல்ஏ குத்துவிளக்கேற்றினர்

காஞ்சிபுரம், ஜன.6: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சீனிவாசா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அறிவுசார் மைய கட்டிடத்தினை, தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து நேற்று வைத்தார். இதில், செல்வம் எம்பி, எழிலரசன் எம்எல்ஏ ஆகியோர் அறிவுசார் மையத்தில் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தனர். காஞ்சிபுரத்தில் டிஎன்பிஎஸ்சி, யூபிஎஸ்சி, நீட் உள்ளிட்ட பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் கிராமப்புற மற்றும் நகர்புற மாணவ – மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து படித்து போட்டி தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்த மாணவர்கள் மழை காலங்களில் படிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனால், மழை மற்றும் வெயில் காலங்களில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இடையூறு இல்லாமல் படிக்க நிரந்தர கட்டிடம் நூலக வசதியுடன் அமைக்க வேண்டும் என மாணவ – மாணவிகள், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், போட்டி தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவ – மாணவிகள் பயன்பெறும் வகையில், காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டில் உள்ள பி.எஸ்.சீனிவாசா நகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், ₹2.50 கோடி மதிப்பீட்டில் அறிவுசார் மையம் கட்டுவதற்கான கட்டிட பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தொடங்கி பணிகள் நிறைவு பெற்று, அதன் திறப்பு விழா சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, ₹2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அறிவுசார் மைய கட்டிடத்தினை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் எம்பி செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் அறிவுசார் மைய கட்டிடத்தினை குத்துவிளக்கேற்றி, வளாகம் முழுவதும் பல்வேறு தலைப்புகளில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, அறிவுசார் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வசதிகளை பயன்படுத்தி, விளக்கம் அளித்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். இந்த அறிவுசார் மையத்தில் சுமார் 500 நபர்கள் ஒரே நேரத்தில் அமர்ந்து படிக்கும் வசதி, ஒரே நேரத்தில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் இனையதளம் மூலம் கற்க கணினி வசதி, சிசிடிவி கேமிரா, கழிப்பறை, கலந்தாய்வு மூலம் கல்வி கற்க தொடுதிரை வசதி கொண்ட வகுப்பறை (ஸ்மார்ட் கிளாஸ்) வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அறிவுசார் மையம் அமையப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில், மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் குமரகுரு நாதன், மண்டல குழு தலைவர் சசிகலா, மாநகராட்சி கவுன்சிலர் மல்லிகா ராமகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் செந்தில் முருகன், மாவட்ட பொருளாளர் சங்கரன் ஆறுமுகம், வர்த்தக அணி மாநில துணை செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் சிகாமணி, மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், பகுதி செயலாளர்கள் சந்துரு, வெங்கடேசன், திலகர், மாநகராட்சி கவுன்சிலர்கள் சுரேஷ், த.விஸ்வநாதன், நிர்வாகிகள் முத்துசெல்வம், குமரேசன், நீலகண்டன் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கோவளம் ஊராட்சியில் ₹3 கோடி மதிப்பில் மீன் இறங்கு தளம்
கோவளம் ஊராட்சியில் ₹3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மீன் இறங்கு தளத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய கோவளம் ஊராட்சியில் மீன்வளத்துறை சார்பில், ₹3 கோடி மதிப்பீட்டில் மீன் இறங்கு தளம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திறப்பு விழா நேற்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, மீன் இறங்கு தளத்தினை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். கோவளம் ஊராட்சியில் நடைபெற்ற இதற்கான விழாவிற்கு, திருப்போரூர் ஒன்றியக்குழு தலைவர் இதயவர்மன் தலைமை தாங்கினார். கோவளம் ஊராட்சிமன்றத் தலைவர் சோபனா தங்கம் சுந்தர் அனைவரையும் வரவேற்றார். பின்னர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ புதிய கட்டிடத்தில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து அதனை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் துணைத்தலைவர் ஆதிலட்சுமி பெருமாள், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post ₹2.50 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்: எம்பி, எம்எல்ஏ குத்துவிளக்கேற்றினர் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,MLA ,Kanchipuram ,Tamil Nadu ,Srinivasa ,Higher Secondary ,School ,Kanchipuram Corporation ,Secretariat ,Selvam ,Ezhilarasan ,
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...